Main Menu

ஆலிம் படித்த இமாம்களின் அறியாமை!! | உலமாக்கள் உணரட்டும்

இது சிர்கில் சேராது , அது சிர்கில் சேராது , இது பித்அத்தில் சேராது, அது பித்அத்தில் சேராது, என்று அன்றாடம்  முஸ்லிம் சமூகத்திடம் கருத்தை விதைக்கும் உலமாக்கள்----!!!

இஸ்லாத்தில் இணை வைப்பு என்றால் என்ன..?

இணை வைத்தல் எந்தளவுக்கு மறுமையில்  விபரீதங்களை ஏற்படுத்தும்..?

எவைகளை இணைவைத்தல் என்று இஸ்லாம் பட்டியல் போடுகிறது..?

பித்அத் என்றால் என்ன? 

சுன்னத் என்றால் என்ன? 

சுன்னத்திற்கு அளவுகோல் என்ன?

என்பதை துவக்கத்தில் இருந்தே உலமாக்கள் வெள்ளி மேடைகளில் குர்ஆன் ஹதீஸ் சான்றுகளுடன்  வலியுருத்தி பேசியிருந்தால் சமூகத்தில் தற்போது இணைவைத்தலும் பித்அத்துகளும் பெருமளவுக்கு ஏற்பட்டிருக்காது.

பள்ளிவாசல் நிர்வாகிகளும் மார்க்கம் தொடர்பான மக்களின் கருத்து வேறுபாடுகளை உள்வாங்கி கடந்த காலத்தில்  சுமூகமாக செயல்பட்டிருந்தால் அனாச்சாரங்கள் வலுவடைந்திருக்காது விருப்பு வெறுப்புகளும் வீரியம் அடைந்திருக்காது சமூக பிளவுகளும் பெருகி இருக்காது.

மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை இரண்டாம் தரம் வைத்து தனது அதிகார பலத்தையும் கடந்தகால சடங்குகளையும்  முதலிடம் வைத்து பிளவுகளுக்கு உரம் போட்ட  வேலைகளையே  பள்ளிவாசல் நிர்வாகிகள் பல காலம் அரங்கேற்றம் செய்து விட்டனர்.

தற்போது கண்டன பிரச்சாரம் அனைத்தும் ஒரு சாராரை எதிர்த்து அல்லது கொள்கை முரண் கொண்ட அறிஞர்களை  எதிர்த்து அல்லது இயக்கத்தை எதிர்த்தே தற்போது பயணிக்கிறது.

குர்ஆன் சுன்னாவை நிலைநிறுத்துவது தான் உலமாக்களின் பணி எனில் குர்ஆன் சுன்னாவை அறிவதில்  ஆராய்சி செய்வதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

நம்பப்பட்டு வருகின்ற செய்திகளை சமூகம் நடைமுறைபடுத்தி வரும் காரியங்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே பல அறிஞர்களின் அணுகுமுறை அமைந்துள்ளது.

பாமரர்களுக்கு தெரியும் பல நபிமொழிகளும் கூட சில உலமாக்கள் அறியாது இருப்பது அவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் மூலமே வெளிப்படுகிறது.

அழைப்பு பணி என்பது சத்தியத்தை எத்தி வைப்பதும் அசத்தியத்தை மார்க்க சான்றுகளுடன் சுட்டிக்காட்டுவதாகும்.

மூடநம்பிக்கைகளை மாற்றார்கள் செய்யும் போது அதை அறிவீனமாக கருதும் மார்க்க அறிஞர்கள் அதே மூடநம்பிக்கையை முஸ்லிம்கள் பெயர் மாற்றி செய்கிற போது அதற்கு சுன்னத் என்று முத்திரை குத்தும் முரண்பாடுகளை காண முடிகின்றது.

இந்நிலை மாறாது அழைப்புபணியும் சிறக்காது உலமாக்களின் கண்ணியமும் மேம்படாது.


Post a Comment

0 Comments